

கொண்டவர்க்கு எது பிடிக்கும்; குழந்தைகள் எதை விரும்பும்
தண்டூன்றி நடக்கும் மாமன் மாமிக்குத் தக்கதென்ன
உண்பதில் எவருடம்புக்கெது உதவாது என்றெல்லாம்
கண்டனள் கறிகள் தோறும் உண்பர் தம்மைக் கண்டாள்.
பொரியலோ பூனைக்கண் போல் பொலிந்திடும் சுவை மணக்கும்
அருந்துமா சிறிய பிள்ளை என என்னும் அவளின் நெஞ்சம்
இருந்தந்தச் சிறிய பிள்ளை இச் என்று சப்புக்கொட்டி
அருந்தியே மகிழ்வதைப்போல் அவள் காதில் ஓசை கேட்கும்.
ஈழத்தில் பிந்திய 80 களில் 6 ம் 7 ம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் இருந்த பாடல் இது.
இதை ஆசிரியர் விளக்கிக் கற்பித்த அன்றே வீட்டில் வந்து அம்மாவைக் கவனித்தேன். நான்கு பிள்ளைகளுக்கும் நான்கு விதமாக முட்டை பொரித்தார். நான்கு விதமாகத் தோசை சுட்டார். இது பல குடும்பங்களிலும் தாய்/மனைவி செய்வது தான் என்றாலும் ஏனோ தானோ என்று சமைப்பவர்களும் செய்து முடித்தால் போதும் என்று செய்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
இப்போதும் வீடுகளில், (மேலை நாட்டினர் கூட) சமையல் பெரும்பாலும் பெண்களிடம் தான் இருக்கிறது. (நளபாகம் என்பதையோ வெளியில் restaurant இல் chef ஆக இருப்பவர்களைத் தவிர்த்து) ஆனால் இதற்குரிய அங்கீகாரத்தைப் பெரும் பெண்கள் எத்தனை பேர்? ஒருநாள் உப்பு கூடிவிட்டால் சலித்துக் கொள்பவர்களில் எத்தனை பேர் நன்றாக இருக்கும் நாட்களில் பாராட்டி இருப்பார்கள்?
இதைப் புரிந்து கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள் இருப்பது துரதிர்ஷ்ட வசமானது. சிறு பிள்ளைகள் சரி. 10, 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளே புரியாமல் இருந்தால் அது வீட்டிலிருக்கும் மற்றவர்களின் தவறு தான்.
சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் வேலைக்குப் போகும் அம்மாக்களும் பிள்ளைக்கும் கலந்து கொண்ட நிகழ்வில் பல குறைகளையும் கூறினார்கள். அந்தப் பிள்ளைகளுக்கும் பல குறைகள் இருக்கும். நானும் அழகன் படத்தில் வருவது போல வேலைக்குப் போகாத அம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கலாமே என எண்ணியதுண்டு. துரதிர்ஷ்ட வசமாக எனது ஆறு வயதில் அப்பாவைப் பிரிந்த எனக்கு வேலையும் பார்த்து எங்களையும் "கைம்பெண் வளர்த்த கழுதைகள்" ஆகி விடக் கூடாது என்று கண்டிப்புடன் வளர்த்த அம்மா வில்லியாகவே தோன்றியதும் உண்டு. ஆனால் 13 வயதில் அவரையும் பிரிந்த பின்னரே அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது. அம்மாவை இழந்த போது காரணமே தெரியாமல் அழுத நான் இன்று வரை அழுதது, அழுவது அதிகம்.
அம்மாவென்றாலே தியாகிகள் என்று வைத்திருக்கும் மனப்பாங்கும் மாற வேண்டும்.
அப்படி இருப்பது அம்மாக்களின் இயல்பு.
ஆனால் அதைப் புரிந்து அனுசரணையாக இருப்பது
உறவுகளின் உன்னதம்.
Photo: Mom hiding kid from shelling in Sri Lanka
Photofromhttp://my.telegraph.co.uk/chandradavid/blog/2009/05/04/a_paradise_turned_into_kingdom_of_vultures
No comments:
Post a Comment