"உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் வேண்டும்"
எல்லோருக்கும் பிடித்த பாரதியின் வரிகளில் ஒன்று. ஆனால் நாற்பது வயதிற்குள்ளேயே மறைந்த ஒரு கவிஞன் இதைக் கேட்டது தேவை இல்லாத விடயம் எனத் தோன்றுகிறது. ஏனெனில் நாற்பதிற்குள்ளே பெரும்பாலானோர்க்கு உள்ளம் வேண்டியபடி உடல் கேட்கும்.
நான் இறைவனைக் கேட்பது நாற்பதின் பின்னால் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடலும் அதற்குமுன் உள்ளம் வேண்டியதைச் செயற்படுத்தும் உள்ளமும் தான். நம்மிடையே எத்தனை பேர் நாங்கள் ஆக விரும்பும் ideal இற்குச் சமீபமாக வாழ்கிறோம்?
இன்றைய எனது காலை விடிந்ததில் இருந்து இரவு வரை எனக்கிருக்கும் தேவைகளின் அடிப்படையில் இப்படித்தான் நான் இருக்க வேண்டும் என நினைக்கும் ideal "எனக்கும்" அதை நடைமுறைப் படுத்தும் "எனக்கும்" எவ்வளவு இடைவெளி?
முதற் காரணம் சோம்பேறித்தனம். இன்று திங்கட்கிழமை என்பதால் ஐந்து மணிக்கு முன்பே எழ வேண்டும் என்பது எனது ideal நான். ஆனால் நடந்தது.......
இலங்கையில் இருக்கும் உறவினருடன் கதைத்து விட்டு facebook, இணையம் என்று மேய்ந்து விட்டு நித்திரைக்குச் சென்றது ஒரு அதிகாலை மணியளவில். பின்பு எப்படி எழுந்திருப்பது? ஐந்துக்கு வைத்த alarm snooze பண்ணி ஐந்தரைக்கு மேல் தான் எழுந்ததே. குடும்பத்தினருக்கான உணவை நானே சமைப்பது என்ற ideal இல் இருந்து விலகியாயிற்று. பின்பு highway, parkway எல்லாம் போட்டாபோட்டியில் கடந்து அலுவலகத்திற்கு மட்டும் எனது ideal நேரத்திற்கு வந்தேன்.
நகைச்சுவை என்பது அடுத்தவரை விமர்சிப்பதல்ல என்பது புத்திக்குத் தெரிந்தாலும் நேற்று லண்டனில் இருக்கும் தங்கை தனக்கு காய்ச்சல்; உடல் அசதி; அங்கு பன்றிக் காய்ச்சல் பரவியிருக்கிறது; அது தானோ என்றதற்கு பன்றி மாதிரி இருப்பவர்களுக்கு சாதாரண காய்ச்சல் வந்தாலே அது பன்றிக் காய்ச்சல் தான் என்று அவளது பருமனைக் கடுப்பேற்றி பின் அவள் என்னைக் கடுப்பேற்றியதில் பெரிய சண்டை இல்லாவிடினும் மனக் கசப்பு வந்தது உண்மை.
பிள்ளைகளை ஒப்பிட்டுக் கதைக்கக் கூடாது என்பது சிறு வயது அனுபவம் மூலமும் கற்றும் பெற்றும் அறிந்த விடயம். ஆனாலும் இன்று அவர்கள் தங்கள் அறையை வைத்திருந்த விதத்திற்கு நேற்று சென்றிருந்த உறவினர் வீட்டுப் பிள்ளைகளுடன் ஒப்பிட்டுத் திட்டியதைத் தவிர்த்திருக்கலாம்.
நேரந்தவறாமை, நாவடக்கம், கோபம், சில சாப்பாடுகள் இவற்றிலெல்லாம் பெரும்பாலும் ideal "எனக்கும்" நடைமுறை "எனக்கும்" முரண் தான். அதனால் தான் ...............................
"உள்ளம் வேண்டியபடி செல்லும் (செலுத்தும்) உள்ளம்" கேட்கிறேன்.
No comments:
Post a Comment