Saturday, January 19, 2008

பொங்கலோ பொங்கல்

தைத்திருநாள் இல்லமெல்லாம்
தளிர்த்திடும் தைப்பொங்கல்
இத்தனை நாள் காத்திருந்தோம்
இனிய தமிழ்ப்பொங்கல்

கூவி அழைத்திடும் சேவல்
குதித்தெழுவோம் குளிப்போம்
பூவெடுப்போம் புதிதணிவோம்
பொங்கலன்று நாங்கள்


கோலமிட்டு விளக்கேற்றிக்
கும்பிடுவாள் அம்மா
பாலெடுத்துப் பொங்கலுக்குப்
பானை வைப்பார் அப்பா


விரும்பிய மா வாழை பலா
விதவிதமாய்க் கனிகள்
கரும்பிளனீர் படைத்து மனம்
களித்திடுவோம் நாங்கள்


வெண்ணிறப்பால் பொங்கி வர
வெடி சுடுவோம் நாங்கள்
இன்னமுதப் பொங்கலுண்ண
இணைந்து நிற்போம் நாங்கள்

ஒரு காலத்தில் இப்படியெல்லாம் பாடிப் பொங்கியது ஞாபகத்தில் எட்டிப் பார்த்தாலும் அமெரிக்காவில் பொங்கலன்று ரைஸ் குக்கரில் பொங்கி closet இல் இருக்கும் சாமி படத்திற்குப் படைத்து விட்டு சூரியனையே பார்க்க முடியாத நாளில் பொங்க வேண்டியிருக்கும் சோகம். கடைசியில் இன்னமுதப் பொங்கலை சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் பெட்டியில் போட்டு அலுவலத்திற்கு கொண்டு ஓடியது அதை விட சோகம். போகும் போது காரில் ஒலித்தது "வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி" . ம் ம் ம் ம் ம் ............... என்னத்தை சொல்லுவது அமெரிக்க வாழ்க்கையை.

No comments: