குழந்தை மொழியியல்
தன் இரண்டு வயதுக் குழந்தைக்கு
மஞ்சு அக்கா
ஒரு நல்ல நாளில் பாடம்
கற்றுக்கொடுக்கத் தொடங்கினாள்.
வீட்டு விலங்குகளின் படங்களையும்
காட்டு விலங்குகளின் படங்களையும்
முதலில் சொல்லிக்கொடுத்தாள்.
ஆர்வமாகக் கேட்டுக்கொண்டது
குழந்தை.
'கரடி எங்கே காட்டு’ என்று
ஆர்வமாகக் கேட்டாள் குழந்தையிடம்
குழந்தையும் சற்றும் யோசிக்காமல்
குதிரையின் வாலைத் தொட்டது.
'குரங்கு?’
சற்றுத் தடுமாறிய குழந்தை
சிங்கத்தைச் சுட்டிக்காட்டியது.
பதற்றத்தோடு அம்மா அடுத்து
கேட்டது 'யானை’யை
சிரித்துக்கொண்டே குழந்தை
யானையெனக் கூறியது ஒட்டகத்தை
காட்டெருமைக்குப் புலியையும்
நாய்க்கு நரியையும்
ஓநாய்க்கு கழுதையையும்
சிறுத்தைக்கு மானையும்
முயலுக்கு முள்ளம்பன்றியுமென
மாற்றி மாற்றிக் காட்டியது.
யோசித்தாள் அம்மா
ஒரே விலங்கை இரண்டு முறை
காட்டாத குழந்தையின் அறிவெண்ணி
புளகாங்கிதம் அடைந்தாள்
குதிரையை 'குதிரை’ என்றுதான்
சொல்ல வேண்டுமா?
'கரடி’ என்றும் சொல்லலாம்!
- சு.இரமேஷ்
நன்றி - ஆனந்த விகடன் 29-ஜூன் -2011
No comments:
Post a Comment